தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க மாநில தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கடந்த நவம்பா் 29-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.
தமிழத்கத்தில் 2.05 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வேட்டி, சேலை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெருவதால், பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கின் விசாரணையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்டங்களில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசை வழங்க அனுமதி கோரியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.