நவம்பர் 16-ம் தேதி முதல் - சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி !
நவம்பர் 16-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயது பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பிற்கு ஒரு தரப்பினர் ஆதரவையும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நந்தன்கோட்டில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தேவஸ்தான தலைவர் பத்மகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளாவில் தற்போது வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முடியாத சூழல் நிலவுவதாகவும், இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.
அடுத்த மாதம் (நவம்பர்) 16-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து அய்யப்பனை தரிசிக்கலாம் என்று இவ்வாறு கூறினார்.