மு.க.ஸ்டாலின் - தமிழக கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் !

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறியுள்ளார்.

நேற்று சென்னை வேப்பேரி பெரியார் திடலில், விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூட்டத்திற்கு தலைமையேற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வீரமணி பேசியது:-

பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் கொள்கைகள் வேறாக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேருவோம் என்று கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:-

ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை.

கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

மேலும் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். ஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து தங்களது போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நக்கீரன் கோபால் பேசியது:-

கூட்டத்தில் பேசிய நக்கீரன் கோபால், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியதால் தான் சிறை செல்வதில் இருந்து தன்னால் விடுபட முடிந்தது என்று கூறினார்.