நக்கீரன் கோபால் கைது - கவர்னர் மாளிகை புகார்
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார்.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தார்.
தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.