டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தது உண்மை தான்

டிடிவி தினகரன் தன்னை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது உண்மை தான் என்றும், அந்த சந்திப்பில் தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி கூறினார்.

இந்த தகவல் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று மதியம் 12 மணியளவில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசினார்.

டிடிவி தினகரன் பேட்டி:-

ஓ.பி.எஸ் என்னை நேரில் சந்தித்தார் என்று தங்க தமிழ்செல்வன் ஒரு தகவலை வெளியிட்டார். அந்த தகவலை நான் மறுக்கவில்லை. அவர் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்து பேசினார். மேலும் கடந்த வாரம் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தூது அனுப்பினார். இத்தனை நாட்கள் ஏன் இதை கூறாமல் இருந்தேன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வளவு மாதங்கள் எனக்கு இதை கூற வேண்டும் என்று தோன்றவில்லை. அதை கூற நான் விரும்பவுமில்லை. ஆனால் இப்போது ஓ.பி.எஸ் சந்திப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறியுள்ளேன்.

மேலும் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார்.

அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வர் ஆக்க முயன்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்