தமிழகத்திற்கு எச்சரிக்கை - 'ரெட் அலர்ட்' 7-ம் தேதி மிகஅதி கனமழை பெய்யும்

வரும் 7-ம் தேதி தமிழகத்தில் மிக அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட். எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில்:-

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ம் தேதி முதல் அதி கனமழை முதல் மிக அதி கனமழை இருக்கும் என்றும், வரும் 5-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது வலுவடைந்து மண்டலமாக மாறி புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கேரளாவில் 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக அதி கனமழைகான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது.