ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் !!
டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் என்றும், தினகரன் குழப்பம் ஏற்படுத்துகிறார். குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் தங்க தமிழ் செல்வனை பேட்டி அளிக்க செய்திருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அப்போது, தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என்று கூறிய ஓ.பி.எஸ். அதற்காக மன்னிப்புக்கேட்டதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம்:-
தினகரன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்தார். ஆனால் மனம்விட்டு பேச தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், இந்த சந்திப்பின் போது மனம்திருந்தி விடுவார் என்று நினைத்து, அதுவும் தினகரன் கேட்டுக் கொண்டதால்தான் அவரை சந்தித்து பேசினேன்.
இத்தனைக்கும் இந்த சந்திப்பு தர்மயுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடைபெற்றது. பல்வேறு தயக்கங்களுக்கிடையேதான் இந்த சந்திப்புக்கு நான் ஒப்புக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் என்பெயரைக் கெடுக்கவே அவர் துடிக்கிறார். ஆனால் எனக்கு எந்த காலத்திலும் பதவி ஆசை இருந்தது இல்லை .நான் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அந்த திருப்தியே எனக்கு போதும்.
முன்னாள் முதலமைச்சர் அம்மாவுக்கு நான் ராஜவிசுவாசியாக இருந்தேன். இனியும் இருப்பேன். எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்த பிறகு எனக்கு தினகரனோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.