தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்ப பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைப்படியே தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டதுடன், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.