நடுரோட்டில் நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்
டெல்லிக்கு அருகேயுள்ள குர்கான் நகரில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியானா மாநிலம், குர்கானில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கிருஷண் கந்த். இவரது மனைவி ரித்து மற்றும் 17 வயது மகன் துருவ் இவர்கள் மிது பாதுகாவலர் மகிபால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
நேற்று மதியம் நீதிபதியின் மனைவி, மகன் மற்றும் பாதுகாவலர் மகிபால் மார்க்கெட்டிற்கு சென்றனர். கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு திரும்பிய ரீத்து மற்றும் துருவ், வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர் மகிபால், ரித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக சுட்டார். அதை தடுக்க முயன்ற துருவையும் தோள்பட்டை, தலை என சரமாரியாக சுட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நீதிபதியின் மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர்.
இதில் நீதிபதியின் மனைவி ரீத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு கொலையாளி மகிபால் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குற்றவாளியான மகிபால் நீதிபதி கிருஷ்ணகாந்த் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.