சென்னை வானிலை ஆய்வு மையம் - அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தின் உள்நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தளவில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 13 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது என இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளளார்.
அதே நேரம் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.