ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
அசோக் பாண்டே என்கிற வழக்கறிஞர், ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக இருக்கிறது. இந்த திருமண வயதை 18 ஆக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
ஆண்கள் ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் வயது 18 என்ற நிலை இருக்கும் போது, ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. ஆண்களின் திருமண வயதை மட்டும் 21 ஆக உயர்த்தியுள்ளது ஏன்? என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு விசாரிப்பதற்குத் தகுதியற்றது எனக் கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
பொதுநலனுக்கு உகந்த வழக்கு இது அல்ல என்று கூறி மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.