இன்று முதல் நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நியாய விலைக்கடை (ரேஷன் கடை) ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஊதிய உயர்வு, பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 25,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், 30,000 மேற்பட்ட நியாய விலைக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் No Work No Pay என்ற அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தங்களது மண்டலத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் விடுமுறை இன்றி செயல்பட உரிய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.