சென்னையில் குடிநீர் தட்டுபாடு - தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. மேலும் வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடிநீரை உறுஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் இந்த மூன்று மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து, ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம். சென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் பெறலாம். நுகர்வோர் தங்களது லாரிகள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் பெறலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.