டிடிவி தினகரன் தரப்பு - 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது.
நேற்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வெளியானது. அதில் தகுதி நீக்கம் செய்தது சரியே என்றும், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சட்டமீறல் இருப்பதாக தெரியவில்லை தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் இன்று தினகரன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கத் தமிழ்ச்செல்வன்:-
நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காகவே மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேல்முறையீடு செல்லும்போதே தேர்தல் அறிவித்தால் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
சட்டப்பேரவைத் தலைவர் ஒவ்வொரு முறையும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்த தவறு என்பதை உணர்த்துவதற்காகத்தான் மேல்முறையீடு செல்கிறோமே, தவிர பயந்து அல்ல.
எங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.