உச்ச நீதிமன்றம் - இந்தியா முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை இல்லை

உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பு அளித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதால் புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். விசாரணையின்போது தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்க முடியாது, அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.