சென்னை உயர்நீதிமன்றம் - 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை, சபாநாயகரின் உத்தரவு செல்லும். என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழக்கி உள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நேற்று நள்ளிரவு வெளியான ஐகோர்ட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டுமெனக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவாளர்கள் தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இரண்டு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தெடர்ந்து வழக்கை மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் 3-வது நீதிபதியாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை ஜூலை 23-ம் தேதி முதல் நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்ய நாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தீர்ப்பு இன்று காலை 10-30 மணிக்கு வழங்கப்பட்டது.

தீர்ப்பின்போது நீதிபதி எம்.சத்தியநாராயணன் கூறியதாவது:-

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. ஏற்கனவே பிறபிக்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்புகள் அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-கள் ஆளுநரிம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிபதி நீக்கினார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் அகற்ற உத்தரவிட்டார். இவ்வாறு தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி சத்தியநாராயணன் கூறினார்.