கஜா புயல் - இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும்

இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் 'கஜா' புயல் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் 21 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும், இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது ஒரு சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் நாகை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடந்து செல்லும் பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கஜா புயல் கரையை கடக்க உள்ளதால் அரசு சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் புயலால் சென்னை மாவட்டத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது.