போலீஸ் எச்சரிக்கை - கோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்
சென்னை போலீஸ் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளார்கள்.
அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.