நாய்க்கறி பீதியால் - வால் நீளமான ஆடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது

தென்சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி எழும்பூர் ரெயில் நிலையத்தில் நாய் போன்ற தோற்றத்தில் நீண்ட வாலுடன் கூடிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

எழும்பூர் ஸ்டேஷனில் நாய் போன்ற நீண்ட வாலுடன் கூடிய இறைச்சி பறிமுதல் செய்ததிலிருந்து, ஹோட்டல் பக்கமே நான்-வெஜ் பிரியர்கள் போவது குறைந்து விட்டது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் வியாபாரம் குறைந்தது.

இத்தனை நாட்களாக நாம் சாப்பிட்டது நாய்க்கறி தானோ? என்கிற கேள்வியும் அவர்கள் மனதில் தோன்றியது.

ரயிலில் வந்திறங்கியது நாய்க்கறிதானா..? இல்லையான்னு…? தெரியறதுக்கு முன்னாடியே அது கெட்டுப்போன நாய்க்கறி என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வதந்தி தீயாக பரவியது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, நாய்க்கறி இல்லை. அது ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

ஆட்டு இறைச்சி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் இதற்காக ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது:-

மக்கள் மத்தியில் ஆட்டு இறைச்சி தொடர்பாக நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கறிக்கடைகளிலும், ஓட்டல்களிலும் வெளி மாநில ஆடுகளே அதிக அளவில் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஜோத்பூரில் 1 கிலோ ஆட்டுக்கறியின் விலை ரூ.300-லிருந்து 350 ரூபாய் வரையிலேயே உள்ளது. அதனை அங்கிருந்து வாங்கித்தான் வியாபாரிகள் இங்கு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்கிறார்கள்.

வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சியை பதப்படுத்திய முறையில்தான் கொண்டு வர வேண்டும் என்றும், சாதாரண பார்சல்களை போல கொண்டு வரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.