சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு ! - மெர்சல் படத்திற்காக விருது !!
சர்வதேச அளவில் மெர்சல் திரைப்படத்திற்க்கு 2018-ம் ஆண்டின் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.
100-வது படமான மெர்சல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில், விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவானது.
கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் விஜய் 3 தோற்றத்தில் நடிக்க, அவரது ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூரியா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, 2014-ம் ஆண்டு முதல் சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிவருகிறது.
இதில் சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ (IARA) என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
Congratulations Vijay Joseph.. Best International Actor. #bestinternationalactor pic.twitter.com/GRqXa9YUJ4
— IARA AWARDS (@IARA_Awards) September 23, 2018
அதற்காக IARA வின் இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது.