பசுமை தீர்ப்பாயம் - மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட்டது
வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைடை ஆலையை 3 வாரத்துக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.