சன் பிக்சர்ஸ் விளக்கம் - காட்சிகளை நீக்க சம்மதித்தது ஏன்?
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியினர் போராட்டம் வன்முறை காரணமாகவே காட்சிகள் நீக்கப்பட்டதாக படத்தயாரிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தியேட்டர்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
விஜய் ரசிகர்களால் கட்டப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன. போராட்டத்தை அடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளூக்கு சேதம் விளைவித்தனர்.
அதனை தொடர்நது திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாக கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
#SarkarPressRelease pic.twitter.com/jqDZccxBV8
— Sun Pictures (@sunpictures) November 9, 2018