சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு முடிவு
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகவும், கோமளவள்ளி என்ற பெயர் வரும் இடத்தில் ம்யூட் செய்வதாகவும், பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
முதலில் 'சர்கார்' படத்திற்கு எதிரான கருத்துக்களை அதிமுக அமைச்சர்கள் தெரிவித்தபோது, இந்த படத்திற்கு அவர்கள் இலவச விளம்பரம் செய்வதாக எண்ணி படக்குழு முதலில் அந்த எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் திரையரங்குகளுக்கு முன் ஆர்ப்பாட்டம், பேனர் கிழிப்பு, திரையரங்குகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு, காட்சிகள் ரத்து என அடுத்தடுத்து எதிர்ப்புகள், வெவ்வேறு வடிவங்களில் வந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையெடுத்து திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து படத்தயாரிப்புக் குழுவிடம் பேசியதாகவும், பேச்சுவார்த்தையில் காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் கோமளவல்லி என்ற வசனம் மியூட் செய்யப்படுவதாகவும், இலவச பொருட்களை தீயில் போடும் காட்சிகள் நீக்கப்படுவதாகவும், மாற்றங்கள் செய்யப்பட்டு சென்சாரின் அனுமதி பெற்று புதுப்பொலிவுடன் 'சர்கார்' திரையிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.