ஏ.ஆர்.முருகதாஸ் - சர்கார் கதை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தின் கதைக்கும், செங்கோல் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், சர்கார் படத்தின் கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எழுத்தாளரும், உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும், செங்கோல் என்ற பெயரில் அக்கதையை தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவரது குற்றச்சாட்டை சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார். பல நாட்கள் கடுமையாக உழைத்து முருகதாஸுடன் இணைந்து சர்கார் படத்தின் கதையை உருவாக்கியதாக கதாசிரியர் ஜெயமோகன் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சர்கார் படக் கதை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் நவம்பர் 6-ம் தேதி படம் வெளியாக எந்தத் தடையுமில்லை.
சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயருடன் நன்றி என்று போட இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். இதையடுத்து வருண் ராஜேந்திரனின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
அதில்.., நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இயக்குநர் பாக்யராஜ் என்னை அழைத்து பிரச்னையை விளக்கினார். ஒருவரின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள் என்ற கருவை 10 வருடத்திற்கு முன்பு உதவி இயக்குநர் ஒருவர் யோசித்திருக்கிறார். மற்றபடி இந்த கதைக்கும் செங்கோல் கதைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.
ஆனால் 10 வருடத்திற்கு முன்னதாக உதவி இயக்குநருக்கு இந்தக் கரு உதித்திருக்கிறது. அவரை ஊக்குவித்து பாராட்டும் வகையில் நன்றி கூறி படத்தின் டைட்டிலில் வெளியிட சொன்னார், சரி என்று ஒப்புக்கொண்டேன்.
மற்ற வகையில் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது என்று அந்த வீடியோவில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.