தேர்தல் ஆணையம் - திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து
வரும் ஜனவரி 28-ம் தேதி அன்று திருவாரூர் தொகுதிக்கு நடத்த இருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.
வரும் 28 -ம் தேதி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
கலைஞர் மறைவால் காலியாக திருவாரூர் தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பிப்ரவரி 6-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும், எனவே திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்களாகும் என குறிப்பிட்டிருந்தார் எனவும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கும். இதேபோல பிற 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் நிவாரண விநியோகப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை, தேர்தல் பணியாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரின எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருந்தார்.
எனவே திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்காக ஜனவரி 3-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையும், தேர்தல் நடத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.