தலைமைச் செயலக ஊழியர்கள் - ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போராட்டம் வாபஸ்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி 22-ம் தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த தலைமை செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகையில்:-
பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. மாணவர்களின் நலன், தமிழக அரசின் நிதிநிலை மற்றும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
எங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தின் போது பிடிக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.