உயர்நீதிமன்றம் அதிரடி - வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை

சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கக் கூடாது என அதிரடி தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.

ஏற்கனவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.

நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது என இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்க மட்டுமே தடை. அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்க தடை ஏதும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் வெள்ளை நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.