மம்தா பானர்ஜி - மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு முயற்சியாக மேற்குவங்க முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பி இருந்தார்.
அதன்படி கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, சத்ருகன் சின்கா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
கொல்கத்தா மாநாட்டில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-
மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது.
மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம் என பேசினார்.