எடப்பாடி பழனிசாமி - கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது.
மேலும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை.
தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர். குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும், வீடியோவை வெளியிட்டவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்று இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.